எந்த ஒரு தொழிலும் முழுமையாக தெரியாத நபர், பணம் சேர்க்க வழி என்ன?
பணம் சம்பாதிப்பதற்கு தொழில் ஏதாவது தெரிந்திருக்கவேண்டும் என்கிற கட்டாயம் எதுவுமில்லை.
தொழில் தெரிந்தவர்கள் எல்லோரும் நிறைய பணம் சேர்த்து வைக்கிறார்கள் என்றும் சொல்வதற்கில்லை.
பணம் சம்பாதிப்பதற்கு மனம் நிறைய தீராத தாகமும், ஆர்வமும் இருந்தால் போதும்.
நம் எல்லோருக்கும் இரண்டு மனம் இருக்கிறதென்கிற உண்மை உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?
ஒன்று, நாம் எப்போதும் எதையாவது சிந்தித்துக்கொண்டிருக்கும் மனம். மற்றொன்று, உள் மனம் அல்லது ஆழ் மனம்.அல்லது அடி மனம் என்றும் சொல்லப்படுகிறது. ஆங்கிலத்தில் இதைத்தான் subconscious mind என்று கூறுகிறார்கள்.
பணம் சம்பாதிக்கவேண்டும் என்கிற எண்ணம் உங்கள் ஆழ் மனதில் பதிந்துவிட்டால் போதும். அப்புறம், உங்கள் செயல்கள் யாவும் அதையே சார்ந்திருக்கும்.
உதாரணமாக, நீங்கள் ஒரு வீடு அதாவது உங்கள் கனவு இல்லம் கட்டவேண்டும் என்று விரும்பி அதற்கான முயற்சிகளைச் செய்ய ஆரம்பிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதுவும் ஒரு மாடி வீடு கட்டவேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
அப்புறம், நீங்கள் வெளியே போகும்போதெல்லாம், உங்கள் கண்களுக்கு நீங்கள் கட்ட ஆசைப்படும் மாதிரியான மாடி வீடுகளாகவே தெரிய ஆரம்பிக்கும். நீங்கள் ஆழ் மனதில் நினைத்திருக்கிற அதே மாடல், பிளான் மற்றும் பெயிண்ட் கலர் இவை எல்லாவற்றுடன் ஒத்துபோகக்கூடிய வீடுகள் மட்டும்தான் உங்கள் கண்ணுக்குத் தெரியும்.
சரி, நீங்கள் ஒரு கார் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோமே. அப்புறம் பார்த்தல், நீங்கள் வெளியே போகும்போதும், வரும்போதும் உங்கள் கண்களில் படுவது எல்லாம் நீங்கள் எந்த பிராண்ட், எந்த கம்பெனி மற்றும் என்ன நிறத்தில் கார் வாங்க உங்கள் ஆழ் மனதில் நினைத்திருக்கிறீர்களோ, அதே மாடல், அதே கம்பெனி, அதே கலர் கார்கள் மட்டும்தான் உங்கள் கண்களுக்குத் தெரிய ஆரம்பிக்கும்.
இது வேறு ஒன்றும் இல்லை. உங்கள் ஆழ் மனதின் பலம்.
இன்னொரு எதிர்மறையான உதாரணமும் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
உங்கள் பிறந்த நாளன்று உங்களை அநேகர் வாழ்த்தி கை குலுக்குகிறார்கள். ஆனால், ஒரே ஒரு நபர் மட்டும், அன்று உங்கள் மனம் புண்படும்படி பேசிவிடுகிறார்.
அன்று இரவு உறங்கப்போகும்போது, உங்கள் ஆழ் மனதை எந்த சம்பவம் அதிகமாகப் பாதித்திருக்கும்? அநேகர் உங்களை வாழ்த்தி கை குலுக்கினதா அல்லது ஒரே ஒரு நபர் மட்டும் உங்கள் மனதைப் புண்படுத்திப் பேசினதா?
ஆம், நீங்கள் நினைப்பது சரிதான். அன்று இரவு உங்கள் ஆழ் மனதில் மிகவும் ஆழமாகப் பதிந்திருக்கும் சம்பவம் எதுவென்றால், உங்கள் மனதைப் புண்படுத்தின அந்த சம்பவம்தான். அன்று இரவு, நீங்கள் இதனால் படுத்தவுடன் நிம்மதியாக உறங்கமுடியாமலும் போய்விடும்.
இப்பொழுது உங்களுக்குப் நன்றாகப் புரிந்திருக்கும் உங்கள் ஆழ் மனதின் ஆற்றலைப் பற்றி.
இதைப் போலத்தான், எந்த ஒரு தொழிலும் தெரியாத ஒரு நபர், அது நீங்களாகக் கூட இருக்கலாம், உங்களுக்குப் பணம் சம்பாதிக்கவேண்டும் என்கிற ஆர்வமும், ஆசையும் உங்கள் ஆழ் மனதில் பதிந்துவிட்டால் போதும். உங்கள் கனவிலும், நினைவிலும் அந்த ஒரே காரியத்தைப் பற்றியே நீங்கள் சிந்தித்துக்கொண்டே இருப்பீர்கள்.
நீங்கள் எப்பொழுதும் உங்கள் ஆழ்மனதில் சிந்தித்துக்கொண்டே இருக்கும் அந்த நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு உருப்பெறும். அதாவது, உங்கள் ஆசை எண்ணமாக மாறி அந்த எண்ணம் உங்கள் ஆழ்மனதில் பதிந்து உருப்பெற்று, செயல் வடிவம் பெற ஆரம்பிக்கும். இவை எல்லாம் தானாகவே நடைபெற ஆரம்பிக்கும்.
அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள் என்றால், நன்றாக தொழில் செய்து லாபம் சம்பாதித்துக்கொண்டிருக்கிற, நம்பத்தகுந்த ஒரு நல்ல நபரைத் தேடிக்கண்டு பிடிப்பீர்கள். அவரிடம் சென்று, இங்கே நீங்கள் மிகவும் நன்றாக இந்தத் தொழிலைச் செய்கிறீர்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
வாருங்கள், நான் முதலீடு செய்கிறேன். இதே போன்ற உங்கள் தொழிலை என்னுடைய ஏரியாவிலும் ஒரு கிளை அமைத்துச் செய்ய ஆரம்பிக்கலாம். நான் முதலீடு செய்யும் சைலன்ட் பார்ட்னர் ஆக மட்டும் இருந்துகொள்கிறேன். தொழில் தெரிந்த நீங்கள் என்னுடன் இணைந்து நம்முடைய புதிய கிளையிலும் செய்ய ஆரம்பியுங்கள். நான் உங்களுக்கு மேலும் எவ்வளவு ஒத்துழைப்புத் தர முடியுமோ அவ்வளவு ஒத்துழைப்புத் தருகிறேன். இலாபத்தில் உங்களுக்கு 60 சதவீதமும் எனக்கு 40 சதவீதமும் எடுத்துக்கொள்ளலாம் என்றால், யார்தான் சம்மதிக்கமாட்டார்கள்?
முதலீடு கை நிறைய வைத்திருக்கும் நபர்கள் இந்த முறையப் பின்பற்றித்தான் பணம் சேர்த்து பெரும் செல்வந்தராகிறார்கள். எனவே, எந்தத் தொழிலும் தெரியாதவர்கள் கூட, இந்த நேர்மையான நல்ல முறையைப் பின்பற்றி பணம் சேர்க்கமுடியும் அல்லவா?