வீடுமனை கிரயம்கொள்ளுவதற்கு முன்பு நாம் அறிந்துகொள்ள தேவையான சட்ட ரீதியான பாயிண்டுகள்
கோபுரமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, குடிசையாக இருந்தாலும் அது நம்முடையதாக இருக்கணும். அப்படி நமக்குன்னு சொந்தமா ஒரு வீட்டைக் கட்டிமுடித்து அதிலே நிம்மதியாக, சந்தோசமாக, எல்லாவற்றுக்கும் மேலாக குடும்பமாக சந்தோசமாக வாழணும் என்று நாம் எல்லோரும் ஆசைப்படுகிறோம் இல்லையா?
குறைந்தபட்சம் ஒரு செண்டு நிலமாவது சொந்தமாக வாங்கிக்கொண்டு அதிலே நம்ம வசதிக்குத் தகுந்த மாதிரி உங்கள் கனவு இல்லத்தைக் கட்டிமுடித்து அதிலே குடியேறிவிடவேண்டும் என்றுதானே அநேகமாக நாம் எல்லோருமே ஆசைப்படுகிறோம்?
அப்படி ஒரு கனவு இல்லத்தை ஆசை ஆசையாக கட்டிகே குடியேறுவதற்கு முதல் அடிப்படைத் தேவை என்ன? நீங்க குருவி சேர்த்த மாதிரி சேர்த்துவைத்த உங்கள் பணத்தைக் கொண்டு நீங்கள் வாங்கும் வீட்டுமனை வில்லங்கம் இல்லாமல் இருக்கணும் இல்லையா? ஐயோ, இப்படி இடியாப்பச் சிக்கலிலே வந்து மாட்டிகொண்டோமே என்று கவலைப்படுகிற மாதிரி ஒரு நிலைமை உங்களுக்கு ஏற்படக்கூடாது அல்லவா?
அப்படியென்றால் நீங்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக இந்தக் காரியத்தைச் செய்யவேண்டும்? நீங்கள் வீடு கட்டுவதற்காக ஒரு நிலம் வாங்கும் நேரம் உங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய பாயிண்ட் ஒவ்வொன்றாக இந்த செய்தியில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. கவனமாகப் படித்துப் பயன் பெற்றுக்கொள்ளுங்கள். முக்கியமான பாயிண்ட்டுகளை குறிப்பெழுதி வைத்துக்கொள்வது எப்போதும் உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்கும்.
.சொந்த வீடு கட்டுவதற்காக நீங்க விலை பேசுகிற அந்த குறிப்பிட்ட வீட்டுமனை, யாருக்குச் சொந்தமாக இருந்தது? இப்போது யாருக்குச் சொந்தமாக இருக்கிறது? நீங்க வாங்கப்போகும் நிலத்தினுடைய ஜாதகம் என்ன? கல்யாண காரியங்களுக்குத் தானே ஜாதகம் பார்ப்போம்னு நீங்க நினைக்கலாம். இதுக்கும் ஜாதகம் பார்க்கணும்னு நான் எதை சொல்லுகிறேன் என்றால், அந்த நிலத்திற்குரிய அணைத்து தஸ்தாவேஜுகள், அதாவது அதனுடைய தாய்ப்பத்திரம் என்று சொல்லப்படுகிற மூலபத்திரம், தற்போதைய பாத்திரம், தற்போதைய பாத்திரம் யார் பேரில் இருக்கிறது? அந்த நிலத்தை உங்களுக்கோ மற்றவர்களுக்கோ விற்பதற்கு அவருக்கு முழு உரிமை உள்ளதா அல்லது வேறு யாரேனும் பங்குதாரர்கள் இருக்கிறார்களா?
இந்த விஷயங்களை எல்லாம் தெளிவாக அறிந்துகொண்ட பின்னர்தான் நீங்கள் அந்த நிலத்திற்கு முன்பணம் கொடுக்கவேண்டும். மீண்டும் சொல்கிறேன், குறைந்தது கடந்த முப்பது வருஷங்களுக்காவது அந்த நிலத்துக்குரிய அசல் அதாவது ஒரிஜினல் தஸ்தாவேஜுகள் அனைத்தையும் ஒன்று விடாமல் சரி பார்த்த்துச் செயல்படவேண்டும். வெறும் நகல் தஸ்தாவேஜுகளைப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்துவிடவேண்டாம். இப்போது அந்த நிலத்திற்கு சொந்தக்காரர் யாரோ அவருடைய பெயரிலே இருக்கிற அனைத்து அசல் தஸ்தாவேஜுகளையும் உங்கள் குடும்ப வக்கீலிடம் கொடுத்து எல்லாம் வில்லங்கமில்லாமல் சரியாக இருக்கிறதா என்பதனை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்.
அவருடைய பெயரிலே சமீபத்திலே தரப்பட்டுள்ள கூட்டுப்பட்டா அல்லது தனிப்பட்டா மேலும் நிலத்தின் அளவைசெய்தது குறித்த தஸ்தாவேஜுகள் இவைகளை சரிபார்த்து வருவாய்த்துறையின் பதிவேற்றத்தில் அந்த நிலம் யார் வசமிருந்த யாருக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டிருக்கிறது எனபது குறித்து நீங்கள் தெளிவாக தெரிந்துகொள்ளலாம்.
குறிப்பாக நீங்கள் கிரயம்கொள்ளப்போகிற அந்த நிலத்தின் தளவரைபடத்தினையும் கேட்டுப்ப்பேற்றுக்கொண்டு அதுவும் சரியாக இருக்கிறதா என்று அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் கிரயம்கொள்ளும் வீட்டுமனைக்கு எப்படிப்பட்ட பயன்பாட்டுக்கு அனுமதி தரப்பட்டிருக்கிறது என்பதனையும் தெரிந்துகொள்ளல் அவசியம். குறிப்பாக, அந்த வீட்டுமனை விவசாயத்திற்காக ஒதுக்கப்பட்டதாக இல்லாமல் வீடு கட்டுவதற்குறிய அங்கீகாரம் தரப்பட்டுள்ளாதா என்பதை அறிந்து கொண்டு விலை பேசுவது உங்களுக்குப் பாதுகாப்பானது.
விலைபேசி முன்பணம் கொடுப்பதற்கு முன்னாள் அந்த வீட்டுமனையில் நீங்கள் வீடுகட்ட அனுமதி பெறப்பட்டுள்ளதா அல்லது வேறு வணிக வளாகங்கள் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட நிலமா என்று அறிந்துகொள்ள வீட்டுமனையினுடைய பயன்பாட்டுக்கான அனுமதி பெறப்பட்ட தஸ்தாவேஜுகளையும் முக்கியமாக வரைபடத்தையும் கேட்டு வாங்கி ஒரு முறைக்கு இரண்டு முறை பரிசீலித்துக்கொள்ளுங்கள். ஒருவேளை அந்த வீட்டுமனையானது வணிகப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டிருந்தால், அந்த மனையில் நீங்கள் வீடு கட்ட முடியாது. சட்டச் சிக்கல்களை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். நீங்கள் வாங்க விரும்பும் நிலத்திற்கு உரிய அங்கீகாரம் பெறப்பட்டுள்ளாதா? Layout approval மற்றும் Layout Plan தஸ்தாவேஜுகளின் அசல் அல்லது குறைந்தபட்சம் நகல்களையாவது சரியாக உள்ளதா என்றும் சரியான அரசாங்க அதிகாரியினுடைய அனுமதியும் கையொப்பமும் பெறப்பட்டுள்ளதா என்றும் உறுதி செய்துகொள்ளுங்கள்.
இன்டர்நெட் மூலமாக அதற்குரிய இணையதளத்தில் இந்த மேற்கூறிய ஆவணங்களை பார்க்க இயலுமானால் அவசியம் அதனையும் பார்த்து, வீடு கட்டுவதற்கான அப்ரூவல் வழங்கப்பட்டுள்ளாதா என்பதனையும் உறுதிசெய்துகொள்ளவும். அங்கீகாரம் கொடுத்து கையொப்பமிட்ட அதிகாரிக்கு அதற்குரிய அங்கீகாரம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளதா என்பதனையும் நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். தமிழ் மாநிலத்தில் கிராமங்களிலுள்ள பஞ்சாயத்து தலைவர்களுக்கு வீடுமனைக்குரிய layout plan களை approve செய்வதற்குரிய அதிகாரம் நமது அரசாங்கத்தால் வழங்கப்படுவதில்லை இத்தனையும் மீறி, தமிழ்நாட்டின் அநேக கிராமங்களில் பஞ்சாயத்துத் தலைவர்களுடைய அங்கீகாரம் பெற்று நிலங்கள் விற்கப்பட்டிருக்கின்றன என்பது யாவரும் அறிந்த உண்மை.