கட்டாயம் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கான உணவு வகைகள்:
எப்போதுமே குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்கும்போது, ரொம்ப கட்டாயப்படுத்தவே கூடாது. குறிப்பாக அவர்களுக்கு பிடிக்கவில்லையென்றால், சாப்பிடச்சொல்லி வலுக்கட்டாயப் படுத்தக்கூடாது. குழந்தைகள் உடல் நலனுக்கு ஏற்ற உணவு வகைகளை முதலில் அவர்களுக்கு முன்பாக பெற்றோர்கள் உண்ணவேண்டும். நீங்கள் ரசித்து, ருசித்து சாப்பிடுவதை குழந்தைகள் பார்த்து அவர்களுக்கே ஆர்வம் ஏற்பட்டு அதன் பின் அவர்களாகவே ஆர்வமுடன் நீங்கள் கொடுக்கும் எந்த உணவையும் சாப்பிடும்படியாகச் செய்யவேண்டும்.
இங்கே, உங்கள் குழந்தைகள் உண்ணவேண்டிய ஒரு சில முக்கியமான உணவு வகைகளை பற்றி அறிந்துகொள்வோம் வாருங்கள். ஆரம்பத்தில், இந்த நான்கு உணவு வகைகளை உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பியுங்கள். அவர்கள் இவைகளை உண்ண பழகிய பின்னர் மேலும் சத்தான உணவு வகைகளை அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்துப் பழக்கி விடலாம்.
லென்டில்ஸ் – பருப்பு உணவுகள் :
பருப்பு உணவுகள் என்று வரும்போது, நாம் அன்றாடம் நமது உணவில் எடுத்துக்கொள்ளும் லென்டிஸ் என்று சொல்லப்படும் எல்லாப் பருப்புகளுமே குழந்தைகள் உடல் நலனுக்கு மிகவும் அவசியமானதுதான். பொதுவாக நமது சிறு பிள்ளைகளுக்கு, எல்லோருமே பருப்பு சோறு சிறிது நெய் கலந்து ஊட்டும்போது அவர்கள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
நிலா நிலா ஓடி வா என்று சொல்லி வானத்திலுள்ள நிலவினைக் காட்டி இன்னும் அநேகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பருப்பு சோறு ஊட்டிக்கொண்டு இருக்கிறார்கள். எல்லாப் பருப்புகளிலுமே புரதம் அதிகமாக உள்ளதால் உணவில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பருப்பு கலந்து ஊட்டுவது குழந்தைகள் புஷ்டியாக வளருவதற்கு உதவி செய்யும். மேலும், பால் சோறு ஊட்டினால், குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. குழந்தைகளுக்கு அவித்த முட்டை தினமும் உண்ணக் கொடுக்கலாம். மாமிச உணவு சிறு குழந்தைகளுக்கு கொடுத்தப்பதை தவிர்த்துவிட்டு, அவர்கள் கொஞ்சம் வளர்ந்தபின்னர் கொடுத்தால் குழந்தைகளுக்கு அஜீரணக் கோளாறு, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு ஏற்படாமல் காத்துக்கொள்ளலாம்.
கீரை வகைகள்:
நமது நாட்டில், அதுவும் குறிப்பாக நமது தமிழ் மாநிலத்தில் எல்லா வீடுகளிலும் மதிய உணவில் கீரை பங்கு வகிக்கும். கீரை வகைகளைக் கணக்கிட்டால் ஐம்பதுக்கும் அதிகமான கீரைகள் இங்கே கிடைக்கின்றன. கீரையில் அயன் அதாவது இரும்புச் சத்து அதிகம். மேலும் கண் பார்வைக்கு ரொம்ப நல்லது. கீரைகளையும் மிகவும் ருசியாக சமைக்கமுடியும். உங்கள் குழந்தைகள் விரும்பும் வகையில் கீரை வகைகளை ஒவ்வொரு நாளும் மத்திய உணவுடன் சேர்த்து ஊட்டவேண்டும். இரவு உணவுடன் கீரை வகைகளை சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்ப்பது உடல் நலனுக்கு நல்லது.
வால்நட் பருப்பு :
வால்நட் பருப்பு கொட்டை வடிவில் இருக்கும். எப்படி நமது வீட்டுப் பெரியவர்கள் கொட்டைப்பாக்கு உடைப்பதெற்கென்று ஒரு சிறிய இரும்பிலான உபகரணம் வைத்திருப்பார்களோ அது போலவே வால்நட் கொட்டையை உடைப்பதற்கும் ஒரு உபகரணம் உண்டு. கொட்டையை உடைத்துப் பார்த்தால் உள்ளே ஒரு சிறிய மூளை வடிவில் நல்ல மணத்துடன் வால்நட் கொட்டை இருக்கும். ஒரு நாளைக்கு ஐந்து வால்நட் பருப்புகளை குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்கலாம்.
இதிலிருக்கும் தாவரம் சார்ந்த OMEGA 3, மற்றும் FATTY ACID குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். குழந்தைகளுக்கு நோய் வராமல் பாதுகாக்கும். இதயம் நல்ல முறையில் இயங்குவதற்கு வால்நட் மிகவும் உதவியாக இருக்கும். .வால்நட்டில் இருக்கிற மெலட்டோனின் – melatonin உங்கள் குழந்தைகளுக்கு இரவு நேரங்களில் நிம்மதியாக உறங்க வழிவகை செய்யும்.
ப்ளூபெர்ரி பழம்:
ப்ளூபெர்ரி பழங்களில் ANTIOXIDANT மிகுதியாக இருப்பதால் எப்போதும் நமது ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவும். இதனால் நமது இரத்த நாளங்களில் எந்த பாதிப்பும் வராமலும் பாதுகாக்க உதவிசெய்யும். அதிலும் விசேஷமாக மற்றப் பழங்களில் காணமுடியாத, tumour என்று சொல்லப்படுகிற கட்டிகளை உருவாக்கும் கெட்ட செல்களை அழிக்கும் ஆற்றல் மிக்கது என்றும் வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். எனவே இந்தப் பழத்தை நம் குழந்தைகள் அடிக்கடி சாப்பிடச் செய்யவேண்டும்.